Saturday, September 25, 2010

ஓர் அறிவிப்பு!

பதியம் இலக்கிய அமைப்பு
மகேஸ்வரி புத்தக நிலையம் நடத்தும்
இலக்கிக்கூடல்

26.09.2010 ஞாயிறுமாலை 5 மணிக்கு.
கே.ஆர்.சி.சிட்டி சென்டர் வளாகம்,
மங்கலம் பாதை, திருப்பூர்.

தலைமை
பாரதிவாசன்,

வரவேற்புரை
மகாதேவன்.

O ஆல்பெர் காம்யுவின்
"மரணதண்டனை என்றொரு குற்றம் " நூல் குறித்த விமர்சனம்.
( மருத்துவர்.நா.சண்முகநாதன், வழக்கறிஞர் மாதவி )

O கூத்துப்பட்டறை தம்பிச்சோழனின் நிகழ்த்துக்கவிதை,

O த.மு.எ.க.ச பொதுச்செயலாளர்
ச.தமிழ்ச்செல்வனின் இலக்கிய உரைவீச்சு.

Thursday, August 19, 2010

உலகப் புகைப்படக்கலை தினம்

அன்பு நண்பர்களுக்கு,

இன்று ’உலகப் புகைப்படக்கலை’ தினம் எனக் கேள்விப்பட்டேன். அதன் அடிப்படையில் நான் எடுத்த புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு...










Friday, March 19, 2010

பிடி கத்தரிக்காய்!

தற்போது நாட்டில் பெட்ரோல்-டீசல் விலைஉயர்வு, நித்யானந்தா, கல்கி பகவான், மகளிர் மசோதா, பென்னாகரம் இடைத் தேர்தல் என்ற பரபரப்புகளுக்கிடையில் "பி. டி. கத்தரிக்காய்" சற்று பின் தங்கி விட்டது. இந்த நேரத்தில் அதைப் பற்றி பேசுவது சற்று பொருத்தமற்று தோன்றினாலும் பேச வேண்டியது அவசியமாகும். மாண்சான்டோவின் இந்திய விற்பனைப் பிரதிநிதி(!) ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்தரி குறித்து கருத்துக் கேட்க மேற்கு வங்கம், கர்நாடகம் என சென்ற இரண்டு மாநிலங்களிலும் ”அமோக வரவேற்பு” பெற்ற காரணத்தால் தற்காலிகமாக பி.டி. கத்தரிக்கு தடை என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அடுத்த நான்கைந்து நாட்களில் மீண்டும் ஒரு கூட்டத்தில் பேசிய ஜெய்ராம், “பி.டி.கத்தரிக்காயை” கொண்டுவர முதலமைச்சர்கள், வேளாண்துறை விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒத்துழைக்க வேண்டும் என மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு நூல் விட்டுப்பார்த்தார். (பாவம்! அவருந்தான் எத்தன பேர சமாளிப்பாரு!).

இந்நிலையில், “உயிரித் தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம்” என்ற பெயரில் மரபணு மாற்று தொழில்நுட்பம் குறித்து மாற்றுக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்க ஒரு புதிய வரைவு மசோதாவை தயாரித்து அதை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் அதன் பாதிப்பை ஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கவில்லை என்றால் ஒரு வருடம் சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம். மேலும் அமெரிக்க விவசாய நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் தலையிடுவதற்கும் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் அவர்கள் நேரடியாக விவசாயம் செய்வதற்குமான வழியாக “விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு” (யாரோட உணவுக்கு பாதுகாப்புன்னு தெரியல!?) என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (அதாவது ஏற்கனவே ”சிறப்பு பொருளாதார மண்டலம்” அப்டீன்ற பேர்ல வெளிநாட்டு நாட்டு கம்பெனிகாரன் வளச்சுபோட்டது போக, மிச்சம் மீதி இருக்கிற கொஞ்ச நஞ்ச விவசாய நெலத்தையும் “ஒப்பந்த விவசாயம்” -ங்கிற பேர்ல அமெரிக்காகாரங்கையில கொடுத்து புட்டு உள்ளூர் விவசாயிய மொத்தமா ஓட்டாண்டியாக்குறதுக்கான ஏற்பாடு!)

இப்படியாக மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவிற்குள் கொண்டுவர அனைத்து வழிமுறைகளையும் கையாள மத்திய அரசு தயாராகி வரும் நிலையில் மரபணு மாற்ற கத்தரி குறித்து வெளிப்படையாக யாரும் கூறாத புதிய தகவல்களை விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதன்மை அறிவியல் அலுவலர் டி.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூத்த உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரு கூட்டத்தில் தெரிவித்தை இங்கு குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். அவர்கள், “அறிவியல் ரீதியாக மரபணு மாற்ற தொழில்நுட்பம் என்பது உயிர் தொழில்நுட்பத்தில் ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மரபணு மாற்றக் கத்தரிக்காய் உண்பதால் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கருத்துக்களுக்கு இதுவரை எவ்வித ஆதாரங்களும்
இல்லை. அதேசமயம் மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடும் விவசாய நிலங்களுக்கு
அருகில் உள்ள, அதை பயிரிடாத மற்ற விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பது நூறு சதவீதம் உண்மையாகும்.

அது எப்படியெனில் அமெரிக்கா போன்ற நாடுகளி நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என மிகப் பெரிய அளவிலான பண்ணை நிலங்களில் ஒரே மாதிரியான விவசாயப் பொருட்களை மிகப்பெரிய அளவில் (Maas Productioon) உற்பத்தி செய்யும் விவசாய முறை பின்பற்றப்பட்டு வருவதால் அங்கெல்லாம் பி.டி. ரக விவசாய பொருட்கள் பயிரிடுவது ஏதுவாக உள்ளது. ஆனால் சிறு-குறு விவசாயிகளையே அதிகம் கொண்டுள்ள நமது நாட்டில் சிறு விவசாயி ஒருவர் தனது சிறிய அளவிலான நிலத்தில் பி.டி. ரகத்தைப் பயிர் செய்தால் அருகில் உள்ள விவசாயியும் அதே ரகத்தை பயிர் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவார். (அதாவது ஒரு ஏக்கர் அளவில் பி.டி. ரகம் பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தைச் சுற்றிலும் சுமார் முப்பது அடிக்கு வேறெந்த ரகப் பயிர்களையும் பயிரிட முடியாது.) இது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் பொருளாதார ரீதியாக பார்க்கும் போது அவ்வாறு பயிர் செய்ய, விவசாயிகள் பெருமளவில் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இது விவசாயிகளையும் நாட்டையும் பெரும்பாதிப்பிற்குள்ளாக்கும். மேலும் மரபணு மாற்ற ரகங்களைப் பயிரிடுவதன் மூலம் உள்நாட்டு விதை உற்பத்தி பாதிக்கப்பட்டு-நாளடைவில் அழிக்கப்பட்டு, பின் வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாண்சாண்டோவிற்கு வழங்கும் சூழல் உருவாகும். இப்போதே கடந்த 2006-07-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 1200 கோடி ரூபாய் வரை அந்நிய விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு ராயல்டியாக வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நம் நாட்டிற்கு அவசியமில்லாத ஒரு செயலாகும். எனவே பெருமளவில் சிறு-குறு விவசயிகளைக் கொண்ட நம் நாட்டிற்கு பி.டி. கத்தரிக்காய் ஏற்புடையதாக இருக்காது.” எனக் கூறுகின்றனர்.

பி.டி. கத்தரிக்குப் பின்னால் இவ்வாறான உள்விவகாரங்கள் இருக்க அதைப்பற்றிப் பேசினாலே கழுத்தை நெரிக்க தயாராகிவரும் மத்திய அரசு ‘பிடி கத்தரிக்காய்!’ என பி.டி. கத்தரிக்காயை அனைவரின் வாயிலும் திணிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிலையில் நுகர்வோர்களாகிய நம் நிலை என்ன? என்பதுதான் மக்களாகிய நம் அனைவரின் முன்பாகவும் உள்ள மிகப் பெரிய கேள்விக்குறியாகும்!

Saturday, February 13, 2010

வேறென்ன செய்ய?!

சமீபத்தில் ஒரு திங்கட்கிழமை நாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் செய்திக்காக சக செய்தியாளர்களுடன் மரத்தடியில் காத்துக் கிடந்த போது திடீரென உறவினர் ஒருவர், "மாப்ள!" என்றழைத்த படியே என் முன்னால் தோன்றினார். மீண்டும் அவரே, "கலெக்டர பாத்து ஒரு மனு குடுக்கலாம்னு வந்தங்க" என்றார். "ஏங்க என்ன பிரச்னை?" என்றேன். "இந்தக் கல்விக் கடனுக்குத் தான் நடையா நடக்கறேன், ஒன்னும் வேலையாவ மாட்டங்குதுங்க மாப்ள" என்றார் சலிப்புடன். "சரி போய் மனு குடுத்துட்டு வாங்க, இங்கயேதான் இருப்பேன்" எனக் கூறி அனுப்பி வைத்தேன். திரும்பி வந்தவர், " இது நாலாவது மனுவுங்க மாப்ள!" எனக் கூறிய படியே விரிவாக புலம்ப ஆரம்பித்தார். அதன் சாராம்சம் இதுதான், ஒரு ஏக்கர் விவசாய பூமியைச் செந்தமாக கொண்ட ஏழை விவசாயியான அவருக்கு தன் மகனை பொறியியல் கல்வி படிக்க வைக்க ஆசை (யாரை விட்டது…?!). கல்லூரியில் இடம் கிடைத்து, சேர்த்தும் விட்டார். 'அரசு கோடிக்கணக்கில் (!) கல்விக் கடன் வழங்குவதாக அறிவிக்கிறதே நம்ம பையனுக்கும் வாங்கி படிக்க வெச்சுருவோம்' என்று மனு செய்திருக்கிறார். மாவட்ட முன்னோடி வங்கியில் இருந்து கடிதமும் வந்தது. அதை எடுத்துக் கொண்டு ஆவலுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளருக்கு வணக்கம் போட்டு கடிதத்தை காண்பித்திருக்கிறார். அவரோ அதே மாதிரி கடிதம் அவருக்கு முன்பாக தனக்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்தி விட்டு, 'நீங்க போய்ட்டு அடுத்த வாரம் வாங்க' எனக் கூறி வந்த வழியே திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் சென்று கேட்டவருக்கு 'அடுத்த வருஷம் வாங்கிக்குங்களேன்' என சமாதானம் கூறி அனுப்பி விட்டார் வங்கி மேலாளர். உடனே மீண்டும் ஒரு மனு தயாரித்து ஒரு திங்கட்கிழமை நாள் கூட்டத்தில் தனது குறையை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு வைத்துள்ளார். மீண்டும் முன்னோடி வங்கியில் இருந்து வந்த பரிந்துரைக் கடிதத்துடன் வங்கி மேலாளரை பார்க்கச் சென்றவரை, 'கலெக்டர்கிட்ட போய் சொன்னா மட்டும் குடுத்துடுவமா?' என வங்கி மேலாளர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட இவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது. 'நீயா? நானான்னு ? பாக்காம விடமாட்டேன்னு' இவர் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு மனு என இறங்க தற்போது நான்காவது முறையாக மனுவுடன் வந்திருக்கிறார். ஆட்சியரின் பரிந்துரை மீது வங்கி மேலாளரின் பார்வை என்ன என்பதை குறிப்பிட்டு மனு வழங்கியும் வழக்கம் போல் மனுவை வாங்கி மாவட்ட முன்னோடி வங்கிக்கு பரிந்துரைத்து விட்டு அவர்கள் பணியை முடித்துக் கொண்டது மாவட்ட நிர்வாகம். ஆனால் ஊராட்சி அளவில் முகாம்கள் நடத்தி கல்விக் கடன் வழங்குவதாக நாளொரு மேனியும் வெளிவரும் செய்திகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. மத்திய நிதியமைச்சர் முதற்கொண்டு, 'எவ்வித பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும்' என சற்று ஆவேசமாகவே அறிக்கையெல்லாம் விட்டார். ஆனால் உள்ளூர் வங்கி மேலாளர்களிடம் யாருடையா பாச்சாவும் பலிக்கவில்லை!

இந்த மனுவும் எதுவும் செய்யாது என்பதை உணர்ந்திருந்த உறவினர், " இப்பிடியே, யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறானே அந்த மேனேஜர், அவனா என்னாதான் பண்றது மாப்ள?" என்றார். சுற்றியிருந்த சக செய்தியாளர்களுடன் நானும் சேர்ந்து மையமாக சிரித்து வைத்தேன். பின் சில ஜனநாயக ரீதியிலான போராட்ட வழிமுறைகளைக் கூறினேன். அதற்கு அவர் தயாராயில்லை. ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் " அவன ஒன்னுமே பண்ணமுடியாதா மாப்ள?, அவன எதாச்சும் பண்ணனும் மாப்ள!" என்றவரை தனியாக அழைத்துச் சென்று, "அவரு வேல முடிஞ்சு வரும் போது ஆள் வெச்சு அடிச்சு, மண்டைய ஒடைச்சிடுங்க!" என்றேன்.

Wednesday, January 13, 2010

வாழ்த்துக்கள் மட்டும்தான்!

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை விடாமல் செய்து வரும் விவசாயிகளுக்கும் நாள்காட்டியில்,ஒருநாளையாவது ஒதுக்கி அவர்களை நினைத்து பார்க்க விட்டு வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கும், ஏதோ திருவிழா என்ற பெயரிலாவது அதை நினைவில் வைத்திருக்கும் நம்மைபோன்ற மக்களுக்கும்(என்னையும் சேர்த்து தான்!) இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! ( அதுக்கும் போட்டியா இப்ப வேறு ஒரு நாள் வந்துருச்சு! அதனால அந்த நாளுக்கும் சேர்த்து இனிய வாழ்த்துக்கள்!)

Monday, January 11, 2010

கொம்பு சீவுதல்!

ஒவ்வொரு வாரமும் குமுதம் வாரஇதழில் "நான் தமிழன்" என்று ஒரு பகுதி வெளிவந்து கொண்டிருக்கிறது.(பெரும்பாலும் படித்துத்திருப்பீர்கள்) இப்பகுதி ஆரம்பித்த உடனேயே 'இப்ப இது தேவையா?' என்ற கேள்வி எழுந்தாலும் ஏதோ 'பழமை, பெருமை, பாரம்பரியம்' பற்றி பேசுகிறார்கள், ஒரு எளிய பதிவாக இருக்கும், என சமாதானம் கூறி மன விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை. கடந்த 6-1-2010 தேதியிட்ட இதழில் 'வணிக வைசியர்' குறித்து எழுதியிருந்தார்கள். அதில், 'விஜயநகர ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தால் இவர்கள் இடம்பெயரும்போது ஒரு குறிப்பிட்ட இடங்களில் குடியேறாமல், தமிழகம் முழுவதும் பரவலாக குடியேறியுள்ளனர். அதனால் அனைத்து மாவட்டங்களிலும் இச்சமூகத்தாரை காணமுடிகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால் தான் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இவர்கள் மிகப்பெரிய அமைப்பாக, அரசியல் சக்தியாக மிளர முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுக்கும் மேல நான் என்னத்த எழுதறது? வேணும்னா கோவப்படாம தலைப்ப மட்டும் மறுபடியும் ஒருதடவ படிச்சுக்குங்க!