Monday, January 9, 2012

தொடர் எழுதித் தொடர உத்தேசம்!

சமீபகாலமாக வலைப்பூவின் பக்கம் எட்டியே பார்க்காத நிலையில் தொடர் எழுதியாவது வலைப்பூவைத் தொடரலாம் என ஒரு விபரீத எண்ணம்(!) எழுந்துள்ளது.

‘உறவுகள்’ எனும் தலைப்பில் எழுத உத்தேசம். எப்போதும் விடை காண முடியாத ஆச்சரியங்களையும், சிக்கல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள உறவுகள் குறித்து காலவரிசைக் கிரமமின்றி நான், என் நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர், அறியாதவர் என கண்டு, கேட்டு, உணர்ந்த உறவுமுறைகள் பற்றி வாரா வாரம் எழுத உத்தேசித்துள்ளேன். (இது வெறும் அறிமுக வாரம் தான்!) வழக்கம் போல் பெயர்கள், இடங்கள் மாற்றப்பட்டே வெளியிடப்படும்.

இந்த வலைப்பூ பக்க(மு)ம் எட்டிப் பார்க்கும் பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவதுடன் வாக்களித்துச் செல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தொடரிகளானால் ( அதாங்க! FOLLOWERS) இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்வேன்!

சென்னை(யில்) தமிழ்!

சுமார் 3 வருடங்களுக்குப் பின் பணி நிமித்தமாக சமீபத்தில் சென்னை விஜயம். அதிகாலை சென்ட்ரலில் இருந்து பெசன்ட் நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ‘துவல் நிலையம்’ என்று ஒரு பெயர்ப் பலகையில் பார்வை நிலைகுத்தியது. பேருந்து ஓட்டத்தில் பார்வையில் இருந்து மறையப் பார்த்த அந்த பெயர்ப் பலகையை மீண்டும் திரும்பிப் பார்த்த போது ‘துவல் நிலையம்’ என்ற அந்த வார்த்தைக்குக் கீழ் ‘PEN CENTER’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த தமிழ் வார்த்தை நினைவில் பதிந்துவிட அன்றைய தினம் பேருந்தில் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் பெயர்ப் பலகைகளை கவனிக்க ஆரம்பித்ததில் ‘வாடகை ஊர்தியகம்’, ‘காலை உணவகம்’, ‘அலுவலர்கள் வெளுப்பகம்’, ‘இரும்பகம்’, ‘குளிர்பானம் மற்றும் செய்தித்தாள் விற்பனையகம்’ எனத் தமிழில் எழுதப்பட்டிருந்த பல்வேறு பெயர்ப் பலகைகளை காண முடிந்தது.

எங்கள் ஊரைப் போன்ற சிறிய நகரங்களில் கூட தமிழில் பெயர்ப் பலகைகளை காண்பது அரிதாக உள்ள நிலையில் தலைநகராம் சென்னையில் அதிக அளவில்-சுமார் 90 சதவீதம் பெயர்ப் பலகைகளை தமிழில் பார்த்தது சற்றே வியப்புதான்!.

இனியும் ‘சென்னைத் தமிழ்’ என கேலி பேசும் நண்பர்கள் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளலாம்!