Tuesday, June 18, 2013

பழனிபாரதியான பாலுமகேந்திரா !

கடந்த 16ம் தேதி இரவு தந்தி டி.வியில் சினிமா குறித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நங்கை இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தை தெரிவித்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசிய காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் முன் விரிந்த எழுத்து பட்டையில் “பழனிபாரதி, பாடலாசிரியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு முறை அதே எழுத்து பட்டை திரையில் ஒளிர்ந்து மறைந்தது. பாலுமகேந்திராவிற்கும் பழனிபாரதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்து கொள்வது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையெல்லாம் பார்த்து தொலைய வேண்டிய நேயர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

ஆத்மா சாந்தியடையட்டும் !


சில விஷயங்களை நம்ப முடிவதில்லை. அப்படித்தான் கடந்த 15ம் தேதி இயக்குனர் மணிவண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சியில் வெளியான போது நம்ப முடியாமல் ஒன்றுக்கு பல முறை மீண்டும் மீண்டும் அதை தொலைக்காட்சியில் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருந்தது. 59 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த அவர் தனது 50வது படத்துடன் பிரியாவிடை பெற்று சென்றுவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் தனது 50வது திரைப்படம் குறித்து வாரப்பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ’ரிட்டையர் ஆகும் போது பாராட்டாதீங்க’ என வலியுடன் குறிப்பிட்டிருந்தார். (அது குறித்த இடுகை ஒன்றும் வெளியிடப்படிருந்தது) பொதுவாக படைப்பாளிகளுக்கு அவர்களது மூச்சு நிற்கும் வரை ரிட்டையர்மெண்ட் என்பது  கிடையாது.

ஒருவேளை தனது ரிட்டையர்மெண்ட் குறித்து முன்கூட்டியே உணர்ந்து தான் அந்த பேட்டியில் அப்படி சொன்னாரோ என்னவோ?. எது எப்படியோ, இயக்குனர் மணிவண்ணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரும் இழப்புதான் !.  அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.!