Tuesday, July 28, 2015

ஏன்...? எதற்கு...?

அப்துல் கலாம் மறைவிற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முகநூலிலும், ஏன் சில ஊடகங்களிலும் கூட அவர் கீழே விழுந்த நிலையில் உள்ள படத்தை வெளியிட்டுள்ளனர். முதுமை, உடல் நலக் குறைவு காரணமாக அவர் கீழே விழுந்ததை அவசியம்  வெளியிடத்தான் வேண்டுமா?

மற்றொருபுறம் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் படத்திற்கு லைக்ஸ் வேறு போட்டிருக்கிறார்கள் பாருங்கள்......

ம்.... என்னத்த.... படிச்சு.....

Tuesday, April 7, 2015

முறை அறிவோம் !

நேற்று இரவு உணவுக்காக அலுவலகத்தின் அருகில் உள்ள உணவகத்திற்குச் சென்றிருந்தேன். எனக்கு எதிரில்- சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதியிடம் டைம் கேட்டு, அவர் 'சில்லற இல்லப்பா' என்றவுடன் கடுப்பாகி அவரைத் துரத்துவாறே-அந்த நடிகரை ஞாபகப்படுத்தும் சிகை அலங்காரம், சாயலுடன் கல்லூரி மாணவர் ஒருவர் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பூரி தட்டுக்கு அருகில் கையில் பிடிக்க முடியாத அளவிலான ஒரு செல்லிடப்பேசியை (செல்போன்) வைத்துக் கொண்டு நிரடிக் கொண்டே இருந்தார்.  நான் மசால் ரோஸ்ட் ஆர்டர் செய்தபோது  அவரும் ஒரு மசால் ரோஸ்ட் ஆர்டர் செய்தார். நான் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சர்வர் மீண்டும் என்னிடம் வந்து ,'வேற என்ன சாப்பிடறீங்க சார்?' எனக் கேட்க நான், 'பில் கொடுத்துடுங்க' என்றேன். பின்னர் சர்வர் எதிரில் இருந்த மாணவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது அருகில் இருந்த மேஜையில் ஒரு பள்ளிச் சிறுவன் சூப் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து தனக்கும் ஒரு சூப் ஆர்டர் செய்தார் கல்லூரி மாணவர். சர்வர் 'என்ன சூப்?' எனக் கேட்க, சற்று அதிர்ச்சியாகி அவர் சர்வரைப் பார்க்க, அவரோ அதைப் புரிந்துகொண்டவராக மேஜையில் இருந்த மெனு கார்டை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டார். அதைப் பார்த்த அந்தக் கல்லூரி மாணவர் முதலில் இருந்த வெஜிடபிள் சூப்பையே ஆர்டர் செய்தார். சர்வர் சற்று புன்முறுவலுடனே சூப் எடுத்து வரச் சென்றார்.
உள்ளங்கையில் உலகத்தையே வைத்திருப்பவர்களுக்கு எதை  முதலில் சாப்பிடுவது, எதை இரண்டாவதாகச் சாப்பிடுவது என்பது கூடவா தெரியாது?

Saturday, April 4, 2015

கூச்சம் ஏன்?

எங்கள் அலுவலகத்தின் அருகே உள்ள நான்கு சாலைச் சந்திப்பு பகுதியில் ஒரு சைவ உணவகம் உள்ளது. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் சுவை, சுகாதாரம், தரம்  ஆகியவற்றை ஒப்பிடுகையில் அது பெரிதாகத் தெரிவதில்லை. எப்போதாவது இரவு அங்கு சாப்பிடச் செல்வோம்.
கடையினுள் நுழையும் போது, காசாளர் இருக்கையைத் தாண்டியவுடன் ஒரு பெரியவர், நெற்றியில் சந்தனப் பொட்டு, குங்குமத்துடன் நின்று கொண்டு வருபவர்களை இருகரம் கூப்பி, வாய்நிறையச் சிரிப்புடன், வாங்க ! வாங்க ! என வரவேற்பார்.
பின்னர் அவரே, வருபவர்களை காலியாக  உள்ள இருக்கைகளுக்கு அழைத்துச் சென்று அமர வைப்பார்.
ஆனால், உணவகத்திற்கு வரும் பெரும்பாலானோர் அவர் இருகரம் கூப்பி வரவேற்கும் போது, சற்றுக் கூச்சத்துடனேயே, தங்கள் கையை பாதி கூப்பியும், கூப்பாமலும்,  தலையை மட்டும் அசைத்தும், ஒரு புன்முறுவல் கூட செய்யாமலும் செல்வர்.
நமது பாரம்பரிய வழக்கப்படி கைப்பி முகமன் கூற கூச்சம் ஏன்?

Friday, January 23, 2015

இவர்தான் கடமை வீரன் !

சென்ற இடுகையின் துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, மற்றொரு நாள் அதே நேரம், அதே பேருந்தில் ஏறினேன். ஓட்டுநரும், நடத்துநரும் நேறு நபர்கள். பேருந்து அவினாசிக்கு அருகில் உள்ள ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஆக்ஸிலேட்டர் ராடு கழன்றுவிட்டது. மேற்கொண்டு பேருந்தை இயக்க முடியாததால் ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டிவிட்டார்.
இறங்கிச் சென்று முயற்சித்ததில் ராடை இன்ஜினில் இணைக்க முடியவில்லை. சட்டென்று மீண்டும் பேருந்தில் ஏறிய ஓட்டுநர் இன்ஜின் பானெட்டைத் திறந்து விட்டு விட்டு, சுமார் 2 அடி நீளமுள்ள இரும்புக் கம்பியால் இன்ஜினின் கீழ் பகுதியில், சற்றே வெளியே நீட்டியபடி இருந்த ஆக்ஸிலேட்டர் ராடின் ஸ்பிரிங் பொருத்தப்பட்டிருந்த இடைவெளியில் வைத்து பின்பக்கமாகத் தள்ளினார். இப்போது பேருந்து நகர ஆரம்பி்த்தது. இடதுகையால் இரும்புக் கம்பியைத் தள்ளிப் பிடித்தபடியே மற்றொரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். ஆனால் கியர் மாற்றும்போது இரும்புக் கம்பியை ஆக்ஸிலேட்டர் ராடில் இருந்து எடுத்துவிட்டு அதை மீண்டும் சரியாகப் பொருத்தி பேருந்தை இயக்குவது என்பது சாத்தியமே இல்லாத காரியமாகும்.
அதன்பின் அந்தக் கம்பியை நான் வாங்கிப் பொருத்திக் கொடுத்தேன். ஆனால் ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போதும் அருகில் இருப்பவர்கள் அதைப் பொருத்திக் கொடுத்தாலும் ஒரு கையால் கம்பியால் பேருந்தை இயக்கிக் கொண்டு, ஸ்டியரிங்கையும் கையாள்வது என்பது நடக்காத காரியம்.
ஆனால் வேறு ஒருவர் அந்த இரும்புக் கம்பியை பிடித்து ஆக்ஸிலேட்டர் ராடை இழுத்தால் பேருந்து ஓடும். நடத்துநருக்கோ,  அதைத் தான் செய்தால் என்ன? என்று தோன்றவில்லை.
அருகில் இருந்த நான் அந்த ராடை வாங்கி ஆக்ஸிலேட்டர் ராடைத் தள்ளிப்பிடித்தேன். அவினாசி பேருந்து நிலையம் சென்ற பின், "யாராவது இப்பிடியே கம்பிய இழுத்துப் புடிச்சா போயிரலாம்" என்றார். நான் "சரி" என்றேன் அவினாசியில் இருந்து சிறிது தூரம் சென்றதும் எனக்கு கை வலிக்க ஆரம்பித்தது. அந்த இரும்புக் கம்பியின்மேல் ஒரு துணியைச் சுற்றிக் கொண்டு மீண்டும் இழுக்க ஆரம்பித்தேன். மீண்டும் நான் கை வலி காரணமாக என் இடது கையை மாற்றியபோது, ஓட்டுநர், நடத்துநரை நோக்கி, "ஏய்யா பாத்துகிட்டே வர,  நீ கொஞ்சம் நேரம் வாங்கி இழுத்துப் புடிக்க மாட்டியா?" என்றார்.
அதன்பின், நடத்துநர் கொஞ்சம் நேரம், நான் கொஞ்சம் நேரம் என்று மாறி, மாறி இழுத்துப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்தோம். இதற்கிடையில், தூக்கி விடப்பட்ட இன்ஜின் பானெட், பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் மோதிக் கொண்டே வந்தது.  அதனால் கண்ணாடிக்கு ஆபத்து வந்து விடும் நிலை வர, ஓட்டுநரோ மற்றொரு கையால் பானெட் கண்ணாடியில்  மோதாதவாறு இழுத்துப்பிடித்தபடியே வந்தார்.
இப்படியே ஒரு வழியாக ஈரோடு (50 கி.மீ) வந்து சேர்ந்தோம். இதற்கு மேல் நான் "விம் பார்" போட்டு எதையும் விளக்க வேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இதற்கு முன் உள்ள இடுகையைப் படித்துக் கொள்ளுங்கள்.

Tuesday, January 13, 2015

"கடமை வீரன்"

பணி முடிந்து இரவு 12 மணிக்கு வீட்டிற்குச் செல்ல கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு பேருந்தில் புறப்பட்டேன். நள்ளிரவு நேரம், பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே,  ஓட்டுநர் பேருந்தை ரசித்து ஓட்டினார். அதனால், அவிநாசியை சுமார் 1 மணியளவில் கடக்க வேண்டிய பேருந்து 1.25 மணிக்கே கடந்து சென்றது.
ஒருவழியாக பெருமாநல்லூரைக் கடந்து செங்கப்பள்ளிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் உள்பகுதியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து விட்டன.
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு விளக்குகளை எரியவைக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஆனால்  முடியவில்லை.  உடனே நடத்துநரிடம், 'ஏம்பா, செங்கப்பள்ளில பின்னாடி வர்ற வண்டிக்கு மாத்திவுட்டுருவமா?' என்றார். நடத்துனரோ, 'மாத்தறதுனாலும், மாத்தலாம். இல்ல அப்டியே போறதுன்னாலும் போலாம். எறங்கறது ஒன்னும் இல்ல. எல்லாமே ஈரோடு சீட்தான்' என்றார். 'இல்ல அது சரிவராது' என்றபடியே பேருந்தை செங்கப்பள்ளியைத் தாண்டி ஓட்டிச் செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
செங்கப்பள்ளி வந்தவுடன், 'ஹெட் லைட்தான் எரியுதில்ல, அப்டியே போயிரலாமா?' என்ற நடத்துநரின் யோசனையைப் புறந்தள்ளிவிட்டு பேருந்தை நிறுத்தியவுடன் பேக்கரிக்குள் புகுந்துவிட்டார்.
நடத்துநரும் அவருக்குத் துணையாகச் செல்ல பேருந்தில் இருந்த பயணிகளும், 'இந்த பஸ்சுல போறதுக்கு, பின்னாடி வர்ற வண்டில போனாக்கூட சீக்கிரம் போயிரலாம் போல இருக்குது' என்ற  முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
எங்கள் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தங்களது "கடமையை" முடித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வருதற்கும், கோவையில் இருந்து எங்கள் பேருந்துக்கு பின்னால் அரை மணிநேரம்  கழித்து புறப்பட்ட பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
நடத்துநரின் உத்தரவுக்கு காத்திராமல் அனைவரும் அந்தப் பேருந்துக்குத் தாவி, தப்பித்து வந்தோம்.
உள்பக்க விளக்குகள் எரியாததற்காக இயக்காமல் நிறுத்தப்பட்ட பேருந்தை காலையில் வெளிச்சம் வந்த பிறகுதான் ஓட்டிச் சென்று சேர்த்தார்களோ என்னவோ?
இந்த வழித்தடத்தில் இதுபோன்ற "கடமை வீரர்கள்" இன்னும் சிலர் இருக்கிறார்கள். உங்களுக்கும் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அனைவருக்கும் ஒரு பாராட்டு விழா நடத்திவிடலாம்!