Tuesday, April 7, 2015

முறை அறிவோம் !

நேற்று இரவு உணவுக்காக அலுவலகத்தின் அருகில் உள்ள உணவகத்திற்குச் சென்றிருந்தேன். எனக்கு எதிரில்- சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதியிடம் டைம் கேட்டு, அவர் 'சில்லற இல்லப்பா' என்றவுடன் கடுப்பாகி அவரைத் துரத்துவாறே-அந்த நடிகரை ஞாபகப்படுத்தும் சிகை அலங்காரம், சாயலுடன் கல்லூரி மாணவர் ஒருவர் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பூரி தட்டுக்கு அருகில் கையில் பிடிக்க முடியாத அளவிலான ஒரு செல்லிடப்பேசியை (செல்போன்) வைத்துக் கொண்டு நிரடிக் கொண்டே இருந்தார்.  நான் மசால் ரோஸ்ட் ஆர்டர் செய்தபோது  அவரும் ஒரு மசால் ரோஸ்ட் ஆர்டர் செய்தார். நான் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சர்வர் மீண்டும் என்னிடம் வந்து ,'வேற என்ன சாப்பிடறீங்க சார்?' எனக் கேட்க நான், 'பில் கொடுத்துடுங்க' என்றேன். பின்னர் சர்வர் எதிரில் இருந்த மாணவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அப்போது அருகில் இருந்த மேஜையில் ஒரு பள்ளிச் சிறுவன் சூப் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து தனக்கும் ஒரு சூப் ஆர்டர் செய்தார் கல்லூரி மாணவர். சர்வர் 'என்ன சூப்?' எனக் கேட்க, சற்று அதிர்ச்சியாகி அவர் சர்வரைப் பார்க்க, அவரோ அதைப் புரிந்துகொண்டவராக மேஜையில் இருந்த மெனு கார்டை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டார். அதைப் பார்த்த அந்தக் கல்லூரி மாணவர் முதலில் இருந்த வெஜிடபிள் சூப்பையே ஆர்டர் செய்தார். சர்வர் சற்று புன்முறுவலுடனே சூப் எடுத்து வரச் சென்றார்.
உள்ளங்கையில் உலகத்தையே வைத்திருப்பவர்களுக்கு எதை  முதலில் சாப்பிடுவது, எதை இரண்டாவதாகச் சாப்பிடுவது என்பது கூடவா தெரியாது?

Saturday, April 4, 2015

கூச்சம் ஏன்?

எங்கள் அலுவலகத்தின் அருகே உள்ள நான்கு சாலைச் சந்திப்பு பகுதியில் ஒரு சைவ உணவகம் உள்ளது. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் சுவை, சுகாதாரம், தரம்  ஆகியவற்றை ஒப்பிடுகையில் அது பெரிதாகத் தெரிவதில்லை. எப்போதாவது இரவு அங்கு சாப்பிடச் செல்வோம்.
கடையினுள் நுழையும் போது, காசாளர் இருக்கையைத் தாண்டியவுடன் ஒரு பெரியவர், நெற்றியில் சந்தனப் பொட்டு, குங்குமத்துடன் நின்று கொண்டு வருபவர்களை இருகரம் கூப்பி, வாய்நிறையச் சிரிப்புடன், வாங்க ! வாங்க ! என வரவேற்பார்.
பின்னர் அவரே, வருபவர்களை காலியாக  உள்ள இருக்கைகளுக்கு அழைத்துச் சென்று அமர வைப்பார்.
ஆனால், உணவகத்திற்கு வரும் பெரும்பாலானோர் அவர் இருகரம் கூப்பி வரவேற்கும் போது, சற்றுக் கூச்சத்துடனேயே, தங்கள் கையை பாதி கூப்பியும், கூப்பாமலும்,  தலையை மட்டும் அசைத்தும், ஒரு புன்முறுவல் கூட செய்யாமலும் செல்வர்.
நமது பாரம்பரிய வழக்கப்படி கைப்பி முகமன் கூற கூச்சம் ஏன்?